திருவண்ணாமலையில் வியாபாரிகள் சாலை மறியல்
திருவண்ணாமலையில் கால்வாயை சீரமைக்கக்கோரி வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை-வேட்டவலம் சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் இருந்து ஏந்தல் ரெயில்வே கேட் வரை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்கம் பணிக்காக சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது தனியார் வணிக வளாகத்தின் அருகில் ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது கால்வாய்கள் இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட பக்க கால்வாய் சீரமைக்கப்படாமல் உள்ளதால் அங்குள்ள கடைக்காரர்கள் தங்கள் கடையின் முன்பு மக்கள் வந்து செல்வதற்காக பலகைகள், கம்புகளால் பாதை அமைத்து உள்ளனர்.
கால்வாய் சீரமைக்கப்படாததால் சிறு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி வியாபாரிகள் 30-க்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிள்களை சாலையில் நிறுத்தி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருவண்ணாமலை வேட்டவலம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.