100 நாள் வேலைக்கான அட்டை வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியல்
பாணாவரம் அருகே 100 நாள் வேலைக்கான அட்டை வழங்கக்கோரி பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
100 நாள் வேலைக்கான அட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் ஊராட்சி அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த பெண்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை செய்ய அதற்கான அட்டை கேட்டு ஊராட்சிமன்றத்தில் சில மாதங்களுக்கு முன்பு மனு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு இதுவரை பணி அட்டையை ஊராட்சி நிர்வாகம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 9-ந் தேதி இது சம்மந்தமாக மாவட்ட கலெக்டரிடம் அவர்கள் மனு அளித்துள்ளனர். மனு குறித்து விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட குறைதீர்ப்பு அலுவலர் கடந்த 11-ந் தேதி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், அதன் அடிப்படையில் ஊராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்படிருந்தும் இதுநாள் வரை லட்சுமிபுரத்தை சேர்ந்த 28 பேருக்கு 100-நாள் வேலைக்கான அட்டையை வழங்காமல் ஊராட்சி நிா்வாகத்தினர் இழுத்தடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் நேற்று ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து திடீரென சோளிங்கர்- பாணாவரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பாணாவரம் போலீசார், வருவாய்த் துறையினர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோர் சம்மந்தபட்டவர்ளிடம் பேசி உடனடியாக 6 நபர்களுக்கு 100 நாள் வேலைக்கான அட்டையை வழங்கினர். மீதமுள்ளவர்களுக்கு விரைந்து வழங்குவதாக உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.