பெண் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி பெண்கள் சாலை மறியல்


பெண் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி பெண்கள் சாலை மறியல்
x

பெண் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

இலுப்பூர் கரடிக்காடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி உமா (வயது 45). இவர் இலுப்பூர் சவுராஷ்ட்ரா தெரு, கரடிக்காடு, புங்கினிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெண்களிடம் பழகி தீபாவளி சீட்டு, ஏலச்சீட்டு நடத்தியுள்ளார். அதிக வட்டி தருவதாகவும் பணம் வசூலித்துள்ளார். இவரது வாக்குறுதியை நம்பி நூற்றுக்கும் மேற்பட்டோர் பணம் கொடுத்துள்ளனர். இவர்களிடம் பெற்ற பல லட்சம் ரூபாய் பணத்தை சுருட்டிக் கொண்டு உமா திடீரென தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என போலீசார் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில் ஒரு ஆண்டுக்கு பிறகு பணம் கொடுத்து ஏமாந்த இலுப்பூரை சேர்ந்த ஒருவர் திருப்பூரில் பதுங்கி இருந்த உமாவை பிடித்து வந்து இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த தகவல் அறிந்த இலுப்பூர் பகுதியில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் இலுப்பூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பெண்கள் உமா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும், நாங்கள் கொடுத்த பணத்தை மீட்டு தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இதனால் போலீசாருக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசாரின் பதிலில் திருப்தி அடையாத பெண்கள் புதுக்கோட்டை-விராலிமலை சாலையில் மறியல் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மொழி அரசு மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story