சேலம் அருகே நடைபாதை வசதி கோரி சாலை மறியல்
சேலம் அருகே நடைபாதை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சூரமங்கலம்:
சாலை மறியல்
சேலம் திருமலைகிரி அருகே உள்ள செம்மண்திட்டு கரட்டுமோடு என்ற பகுதி உள்ளது. இங்கு ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு நடந்து செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அருகில் உள்ள பட்டா நிலம் வழியாக சென்று வருகின்றனர். ஆனால் அந்த நிலத்தின் உரிமையாளரும் பயன்படுத்த எதிர்ப்பு ெதரிவித்தனர். இதனால் கரட்டுமோடு பகுதி மக்கள் கிராம நிர்வாக அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை 8.30 மணி அளவில் 50-க்கும் மேற்பட்ட பொது மக்கள் செம்மண்திட்டு பஸ் நிறுத்தத்தில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சேலம்-இளம்பிள்ளை ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் இரும்பாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சல் குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் வருவாய் துறையினரை வரவழைத்து போலீசார் நடைபாதை வசதி செய்து தரப்படும் என உறுதி கூறினர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.