எருதுவிடும் விழாவுக்கு அனுமதி அளிக்காததால் சாலை மறியல்
நாட்டறம்பள்ளி அருகே எருது விடும் விழாவுக்கு அனுமதி அளிக்காததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எருதுவிடும் விழா
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த கொத்தூர் கிராமத்தில் தை மாதம் மயிலார் பண்டிகையையொட்டி பல ஆண்டுகளாக எருது விடும் விழா நடைப்பெற்று வருகிறது. அதன்படி இந்த வருடம் கடந்த 23-ஆம் தேதி மயிலார் பண்டிகையையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் எருது விடும் விழா நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.
பின்னர் பாதுகாப்பு காரணமாக 28-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதன்பிறகு 30-ந்் தேதி எருதுவிடும் நடத்திக்கொள்ள அதிகாரிகள் அனுமதி அளித்து இருந்தனர். இந்த நிலையில் அதிகாரிகள் அனுமதியை ரத்து செய்து அடுத்த மாதம் (பிப்ரவரி) 10-ந் தேதி எருது விடும் விழா நடத்திக் கொள்ளுமாறு தெரிவித்து உள்ளனர்.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று நாட்டறம்பள்ளியில் இருந்து ஆந்திர மாநிலம் குப்பம் செல்லும் சாலையில் திடீரென அதிகாரிகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் மற்றும் வாணியம்பாடி துணைபோலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலைமறியல் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது நாளை (இன்று) (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை எருது விடும் விழா நடத்த அனுமதி அளித்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.