குடிநீர் கேட்டு சாலை மறியல்


குடிநீர் கேட்டு சாலை மறியல்
x

பழுதடைந்த மின்மாற்றியால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆகவே, அந்த மின்மாற்றியை சீரமைக்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

கபிஸ்தலம் அருகே உள்ள சத்தியமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சத்தியமங்கலம் காலனி தெரு பகுதியில் உள்ள மின்மாற்றி(டிரான்ஸ்பார்மர்) பழுதடைந் உள்ளது. இதனால், மின்மோட்டார் மூலம் இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக இப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், விரக்தி அடைந்த சத்தியமங்கலம் காலனி தெரு மற்றும் குடியானத் தெரு பொதுமக்கள் சத்தியமங்கலம்-வாழ்க்கை செல்லும் சாலையில் நேற்று திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதாகிரேசி, தாசில்தார் பூங்கொடி, வருவாய் ஆய்வாளர் சுகுணா, ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நடவடிக்கை

பின்னர் இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் மற்றும் கபிஸ்தலம் மின்சார வாரிய உதவி பொறியாளர் குணசேகரன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் மின்மாற்றியை சீரமைத்து தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் காரணமாக சத்தியமங்கலம்-வாழ்க்கை பிரதான சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story