ஆண்டிப்பட்டி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
ஆண்டிப்பட்டி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆண்டிப்பட்டி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் தட்டுப்பாடு
ஆண்டிப்பட்டி அருகே கன்னியப்பபிள்ளைபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மாயாண்டிபட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு பாலக்கோம்பை கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் கூடுதல் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக பாலக்கோம்பை கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் மாயாண்டிபட்டி கிராமத்திற்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல் ஆழ்துளை கிணறு மூலம் வழங்கப்படும் தண்ணீரும் சரிவர வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதியடைந்து வந்தனர். மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சாலை மறியல்
இதனால் மாயாண்டிப்பட்டி கிராம மக்கள் நேற்று காலிக்குடங்களுடன் அங்குள்ள ஆண்டிப்பட்டி-வேலப்பர் கோவில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், மாயாண்டிபட்டியில் குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ராஜதானி போலீசார் மற்றும் கன்னியப்பபிள்ளைபட்டி ஊராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து, மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுத்து, குடிநீர் சீராக வழங்கப்படும் என்று உறுதியளித்தனர்.
இதையடுத்து மறியலை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் ஆண்டிப்பட்டி-வேலப்பர் கோவில் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.