சிறுமியை மீட்டுத்தரக்கோரி சாலை மறியல்
சிறுமியை மீட்டுத்தரக்கோரி சாலை மறியல் நடந்தது
மயிலாடுதுறை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி மயிலாடுதுறையில் உள்ள டெய்லரிங் கடையில் வேலை செய்து வந்தார். கடந்த 30-ந் தேதி வேலைக்கு சென்ற அந்த சிறுமி வீடு திரும்பவில்லை. இது குறித்து சிறுமியின் பெற்றோர் நேற்றுமுன்தினம் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றனர். இந்தநிலையில் சிறுமி மாயமான வழக்கில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி போலீசாரை கண்டித்து மயிலாடுதுறை போலீஸ் நிலையம் அருகே சிறுமியின் உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் சம்பவ இடத்துக்கு வந்து சிறுமி மாயமான வழக்கில் போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக உறுதியளித்தார். இதன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.