உரிய ஊதியம் வழங்கக்கோரி 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சாலை மறியல்


உரிய ஊதியம் வழங்கக்கோரி 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சாலை மறியல்
x

உரிய ஊதியம் வழங்கக்கோரி 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கரூர்

கிருஷ்ணராயபுரம்,

முற்றுகை போராட்டம்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி பகுதியில் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஏரி, குளம், வாய்க்கால், வாரி போன்றவற்றை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் வேலை பார்த்த 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு குறைவான ஊதியமே வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளதாக பேரூராட்சிக்கு உட்பட்ட 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் 70-க்கும் மேற்பட்ட பெண்கள் பேரூராட்சி அலுவலகத்தை கடந்த 2 நாட்களாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பேரூராட்சி தலைவர் சவுந்தரபிரியா, செயல் அலுவலர் குமரவேலன் ஆகியோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் 100 வேலை திட்டத்தில் வேலை பார்த்ததற்கான உரிய ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் எனக் கூறி நேற்று அந்த வழியாக வந்த அரசு பஸ்சை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், நீங்கள் வேலை பார்த்ததற்கு உண்டான அளவிற்கு தான் ஊதியம் வங்கி கணக்கில் வரவு வழங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து புலம்பியவாறு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story