ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
வாணியம்பாடியில் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ர்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாணியம்பாடியில் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ர்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆக்கிரமிப்பு
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட கோவிந்தபுரம், நூருல்லாபேட்டை ஆகிய பகுதிகளில் கால்வாய் புறம்போக்கு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து 65 குடும்பங்கள் வீடுகளை கட்டி கடந்த 30 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு பெய்த கன மழை காரணமாக மழை நீர் செல்ல முடியாமல் சாலைகள், அரசு மருத்துவமனை, பள்ளிகளில் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள், நோயாளிகள், மாணவர்கள் அவதிப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் ஏ.வ.வேலு, சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.செந்தில்குமார், தேவராஜி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனே செய்து தர உத்தரவிட்டனர்.
சாலை மறியல்
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் வருவாய்த்துறை சார்பில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளையும், கால்வாய் ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக அகற்றக் கோரி சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் நூருல்லா பேட்டை பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பட்சத்தில் நகரப் பகுதியிலே இடம் ஒதுக்கி தர வேண்டும், 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திகுவாபாளையம் போன்ற இடங்களுக்கு போக மாட்டோம் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தாசில்தார் சம்பத் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம்நடந்த போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.