சாலையை அகலப்படுத்தக்கோரி சாலை மறியல்
சாலையை அகலப்படுத்தக்கோரி சாலை மறியல்
கும்பகோணம் அருகே கொரநாட்டுக்கருப்பூர் நத்தம் கிராம பகுதியில் சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் வாகனங்கள் செல்ல முடிவதில்லை. நேற்று மாலை அந்த சாலை வழியாக பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த ஆட்டோ சாலையில் வழுக்கி வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதனால் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்தநிலையில் குறுகலான சாலையை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி கும்பகோணம்- சென்னை சாலையில் அமர்ந்து பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கும்பகோணம் தாலுகா இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கும்பகோணம்- சென்னை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.