மாநகராட்சியில் வளர்ச்சி திட்டங்கள் ஆய்வு: அனைத்து சாலைப்பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்-அதிகாரிகளுக்கு, ஆணையாளர் கிறிஸ்துராஜ் உத்தரவு


மாநகராட்சியில் வளர்ச்சி திட்டங்கள் ஆய்வு: அனைத்து சாலைப்பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்-அதிகாரிகளுக்கு, ஆணையாளர் கிறிஸ்துராஜ் உத்தரவு
x

சேலம் மாநகராட்சியில் நடைபெற்று வரும் அனைத்து சாலைப்பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, ஆணையாளர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.

சேலம்

சாலை அமைக்கும் பணி

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் 12-வது வார்டுக்கு உட்பட்ட ராஜகணபதி நகரில் ரூ.82.38 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சாலை பணியை ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் அம்மாப்பேட்டை மண்டலம் தில்லை நகர் முதல் கிராஸ் மற்றும் மெயின் ரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனி 2-வது குறுக்கு சந்து, லட்சுமி நகர், காந்தி நகர், சத்திய மூர்த்தி தெரு, அய்யனார் கோவில் பாலம், 34-வது வார்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஜோதி டாக்கீஸ் பகுதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குடிநீர் குழாய்கள்

தொடர்ந்து அங்குள்ள குடிநீர் திட்டப்பணி மற்றும் பராமரிப்பு பணியையும், நாகர்படையாச்சிக்காடு பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி, 9-வது வார்டில் ராமமூர்த்தி புதூர் 1-வது மற்றும் 2-வது குறுக்கு தெரு பகுதியில் மழைநீர் வடிகால் மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி என மொத்தம் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.5½ கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பணிகளை ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் அவர் சாலைகள் தரமான முறையில் போடப்பட வேண்டும் எனவும், தார்சாலைகள், பேவர் பிளாக் சாலை அமைக்கும்போது சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் வசதி உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்து சாலைப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

விரைந்து முடிக்க வேண்டும்

மேலும் சாலையின் ஓரங்களில் வெள்ளை கோடு அமைத்தும், சாலைகளில் ஒளிரும் சிவப்பு விளக்குகள் அமைத்திட வேண்டும் எனவும், தேவைப்படும் இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும், குறிப்பிட்ட கால வரையறைக்குள் சாலைப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனவும் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.

சேலம் பொன்னம்மாபேட்டையில் ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டிடப்பணியை ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்து அங்குள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது, செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், புவனேஸ்வரி, சுமதி, கவுன்சிலர்கள் ஈசன் இளங்கோ, சாந்தி, திருஞானம், தெய்வலிங்கம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story