கடலரிப்பால் சாலை துண்டிப்பு; வீடுகள் இடியும் அபாயம்
குளச்சல் கொட்டில்பாடு பகுதிகளில் மீண்டும் கடல் சிற்றம் ஏற்பட்டதால் கடலரிப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. வீடுகள் இடியும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மீனவர்கள் மனு அளித்தனர்.
குளச்சல்:
குளச்சல் கொட்டில்பாடு பகுதிகளில் மீண்டும் கடல் சிற்றம் ஏற்பட்டதால் கடலரிப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. வீடுகள் இடியும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மீனவர்கள் மனு அளித்தனர்.
தொடரும் கடல் சீற்றம்
குமர ி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கி ஜூலை, ஆகஸ்டு மாதம் கடைசி வரை கடல் சீற்றத்துடன் காணப்படும். இந்த மாதங்களில் ராட்சத அலைகள் எழுந்து ஆக்ரோஷத்துடன் கரைகளை வாரிச்சுருட்டி வருகிறது. இதனால் மேற்கு கடற்கரை கிராமங்களான அழிக்கால், குளச்சல், கொட்டில்பாடு, இனயம், கோடிமுனை, இனயம்புத்தன்துறை, இரையுமன்துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, இரவிபுத்தன்துறை, வள்ளவிளை, மார்த்தாண்டன் துறை, நீரோடி உள்ளிட்ட கிராமங்களில் ராட்சத அலைகளால் மண்ணரிப்பு ஏற்பட்டு வருகிறது. பல கிராமங்களில் கடல்நீர் வீடுகளுக்குள் புகுவதும், கரைகளை ஒட்டியுள்ள வீடுகள் சேதமடைவதும் வழக்கமாக காணப்படுகிறது.
இதேபோல் தமிழக-கேரள எல்லையில் உள்ள பொழியூர் பகுதியிலும் கடல் சீற்றம் காரணமாக சாலை துண்டிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஏற்பட்ட சீற்றத்தில் இரவிபுத்தன்துறை அருகே எடப்பாடு பகுதியில் ஏற்கனவே சேதமடைந்திருந்த சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டு காணப்படுகிறது.
அலைதடுப்புச்சுவர் சேதம்
இந்தநிலையில் குளச்சல் அருகே உள்ள கொட்டில்பாட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடல் சீற்றத்தால் அந்த பகுதியில் உள்ள ஆலயம் அருகே அமைக்கப்பட்டிருந்த அலைதடுப்புச்சுவர் கற்கள் சரிந்து விழுந்தன. இதனால் அந்த பகுதியில் சுமார் 25 அடி பள்ளம் விழுந்து மேற்கு சாலை துண்டிக்கப்பட்டது.
கிழக்கு பகுதியில் 2 இடங்களில் அலை தடுப்புச்சுவர் கற்கள் சேதமடைந்து ராட்சத அலைகளால் அடித்துச் செல்லப்பட்டன. தொடர்ந்து ஏற்படும் கடல் சீற்றத்தில் இருந்து வீடுகளை பாதுகாக்க அங்கு மணல் மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டன. ஆனால், நிரந்தர தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
வீடுகள் இடியும் அபாயம்
இந்தநிலையில் கடந்த 4 நாட்களாக குளச்சல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. கொட்டில்பாடு பகுதியில் மீண்டும் கடலரிப்பு ஏற்பட்டு அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மூடைகள் கடலுக்குள் அடித்து செல்லப்படும் நிலை ஏற்பட்டு கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் இருந்தது.
இதற்கிடையே கொட்டில்பாட்டில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று முன்தினம் பிரின்ஸ் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கடலரிப்பில் இருந்து கொட்டில்பாடு மீனவர் கிராமத்தை பாதுகாக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துவேன் என உறுதியளித்தார். இந்தநிலையில் நேற்று மீண்டும் கொட்டில்பாட்டில் கடல் சீற்றம் ஏற்பட்டது. எதிர்பார்த்தபடியே கடலரிப்பால் ஏற்பட்ட பள்ளத்தில் அடுக்கப்பட்டிருந்த மணல் மூடைகள் ராட்சத அலைகளால் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் கொட்டில்பாடு கடற்கரைக்கு செல்லும் கிழக்கு சாலையும் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து எழும் ராட்சத அலைகளினால் அருகில் உள்ள வீடுகள் இடியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகள் ஆய்வு
குளச்சலில் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக துறைமுக பழைய பாலம் பகுதியில் மணலரிப்பு ஏற்பட்டுள்ளது. தூண்களும் அரித்தபடி வெளியே தெரிகிறது. மணற்பகுதியிலும் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் மாலை வேளையில் பொழுது போக்குவதற்கு கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மணற்பரப்பில் அமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று கடலரிப்பால் சேதமடைந்த பகுதிகளை கல்குளம் தாசில்தார் கண்ணன் தலைமையில் குளச்சல் வருவாய் ஆய்வாளர் முத்துபாண்டி ஆகியோர் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து குளச்சல் நகராட்சியினரும் சென்று பார்வையிட்டனர்.
கலெக்டரிடம் மனு
இந்த நிலையில் கொட்டில்பாடு பங்குத்தந்தை ராஜ் தலைமையில் பொதுமக்கள் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், "குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் கடந்த 2-ந் தேதி ஏற்பட்ட கடல் சீற்றத்தின் காரணமாக ஊரின் கிழக்கு பகுதியில் போடப்பட்ட கடலரிப்பு தடுப்புச்சுவர் சேதமடைந்து கடல் நீர் குடியிருப்புக்குள் புகுந்தது. மேலும், கடந்த 8-ந் தேதி ஏற்பட்ட கடலரிப்பால் ஆலயத்தின் தெற்கு பகுதியில் மீண்டும் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் இருக்கிறார்கள்.
எனவே, போர்க்கால அடிப்படையில் கடலரிப்பு தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.