சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
உடுமலை யு.எஸ்.எஸ்.காலனி பகுதியில் உள்ள பாலத்தின் அருகே சாலை பழுதடைந்துள்ளதால் வாகன ஓட்டுனர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
யு.எஸ்.எஸ். காலனி பாலம்
உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து தாராபுரம் சாலைக்கு சென்று சேர்வதற்கு அனுஷம்நகர், யு.எஸ்.எஸ்.காலனி வழியாக, சிவசக்தி காலனி பகுதி வரை இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையில் கார், வேன், சரக்குவாகனங்கள்,ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த இணைப்புசாலையில் அனுஷம்நகர்பகுதியில் கழுத்தறுத்தான் பள்ளத்தின் (ஓடை) குறுக்கே உயர்மட்ட கான்கிரீட் பாலம் உள்ளது.
குண்டும், குழியுமான சாலைப்பகுதி
இந்த பாலத்தை அடுத்து சாலைப்பகுதியில் இருபுறமும் சிறிய அளவில் கான்கிரீட் தளம் உள்ளது. பாலத்தை அடுத்து பக்கவாட்டு பகுதியிலும் கான்கிரீட் தளம் உள்ளது. இந்த கான்கிரீட் தளத்தின் ஒருபகுதி சேதமடைந்து விழுந்துவிட்டதால் அந்த இடம் குழியாக உள்ளது.
இந்த பாலத்தின் மற்றொரு பகுதியிலும் சாலைப்பகுதி குண்டும் குழியுமாக உள்ளது. அத்துடன் அந்த உயர்மட்ட பாலத்திலும் தளம் பகுதி ஆங்காங்கு சிறிய அளவில் குண்டும், குழியுமாக உள்ளது.அதனால் வாகன ஓட்டுனர்களும், சாலையோரம் நடந்து செல்லும் பொதுமக்களும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
சீரமைக்க கோரிக்கை
இந்த சாலையில் வாகனங்கள் தொடர்ந்து சென்றுவருவதால், பழுதடைந்துள்ளபகுதி அதிகமாக பழுதடையக்கூடிய வாய்ப்பு உள்ளது.அதனால் அங்கு பழுதடைந்துள்ள கான்கிரீட் தளம்பகுதிகளை சீரமைக்கவேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.