குடிநீர் குழாய் உடைப்பால் அலங்கோலமாகிய ரோடு


குடிநீர் குழாய் உடைப்பால் அலங்கோலமாகிய ரோடு
x

குடிநீர் குழாய் உடைப்பால் அலங்கோலமாகிய ரோடு

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் காலேஜ் ரோடு, கொங்கணகிரி பகுதியில் குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் இங்குள்ள ரோடு குண்டும், குழியுமாக அலங்கோலமாக மாறியுள்ளது.

வீணாகும் குடிநீர்

திருப்பூர் காேலஜ் ரோடு கொங்கணகிரி பகுதியில் இருந்து விவேகானந்தா நகர் செல்லும் ரோடு அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்தது. இதில் ஏற்கனவே இருந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதன்காரணமாக உடைந்த குழாயில் இருந்து அதிக அளவிலான குடிநீர் ரோட்டில் பாய்ந்து கொண்டிருக்கிறது.

குழாய் உடைப்பு அவ்வப்போது சீரமைக்கப்பட்டாலும் இதுவரை நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படவில்லை. இதனால் அடிக்கடி குழாயில் இருந்து குடிநீர் வெளியே பாய்ந்து கொண்டிருக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் யாருக்கும் பயனின்றி ரோட்டிலும், அருகில் உள்ள தோட்டத்திலும் பாய்ந்து கொண்டிருப்பது காண்போரை கவலையடைய செய்கிறது. இதேபோல் இங்கு ஏற்படும் குடிநீர் விரயம் காரணமாக சுற்றுவட்டாரத்தில் உள்ள பகுதியில் குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

அலங்கோலமாகிய ரோடு

இது ஒருபுறமிருக்க, இங்கு தொடர்ச்சியாக ரோட்டில் பாயும் குடிநீரால் இங்குள்ள ரோடு சேதமடைந்து வருகிறது. ரோட்டில் ஆங்காங்கே பெரிய குழிகள் ஏற்பட்டுள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இருசக்கர வாகனத்தில் குழந்தைகளை அழைத்து செல்லும் பெற்றோர் ரோட்டில் உள்ள பெரிய குழியில் தட்டுத்தடுமாறியபடி வாகனங்களை ஓட்டி செல்கின்றனர்.

சற்று நிலைதடுமாறினாலும் தண்ணீர் தேங்கி நிற்கும் குழிக்குள் விழக்கூடிய நிலை உள்ளது. இதேபோல் இவ்வழியாக பள்ளி பேருந்துகள் தினமும் அதிக அளவில் வந்து சென்றவண்ணம் இருப்பதால் ரோட்டில் உள்ள குழிகள் நாளுக்கு நாள் பெரிதாகி ரோடு அலங்கோலமாக மாறி வருகிறது. எனவே, இங்கு ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைப்பை நல்ல முறையில் சீரமைத்து நீண்ட நாள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


கொங்கணகிரி பகுதியில் உள்ள ரோடு குண்டும், குழியுமாக இருக்கும் காட்சி.


Next Story