ரூ.3½ கோடியில் சாலை மேம்பாட்டு பணி
திண்டுக்கல்லில் ரூ.3½ கோடியில் சாலை மேம்பாட்டு பணியை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்.
புகார் சேவை மையம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த புகார் சேவை மையம் தொடக்க விழா நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஒருங்கிணைந்த புகார் சேவை மையத்தை தொடங்கி வைத்து பேசுகையில், நவீன தொழில்நுட்பத்துடன் புகார் சேவை மையம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் குடிநீர், தெருவிளக்கு, சாலை, பாதாள சாக்கடை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். மேலும் புகார்களுக்கு தீர்வு கிடைத்துவிட்டது என பொதுமக்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே அந்த மனுக்களுக்கு தீர்வு அளிக்கப்பட்டதாக கருதப்படும் என்றார்.
விழாவில் மாநகராட்சி மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, மாவட்ட வருவாய் அலுவலர் சேக் முகையதீன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ரூ.3½ கோடியில் சாலை பணி
அதையடுத்து மாநகராட்சி பகுதிகளில் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை மேம்பாட்டு பணிக்கான தொடக்க விழா நடந்தது. இதில் ரூ.1 கோடியே 76 லட்சம் மதிப்பில் திண்டுக்கல் ரவுண்டு ரோடு-சிலுவத்தூர் சாலை சந்திப்பில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிகள், நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 76 லட்சத்தில் ஆர்.எஸ்.ரோடு பகுதிகளில் தார்சாலை அமைத்தல், ஆர்த்தி தியேட்டர் சாலை, நாராயண அய்யர் திருமண மண்டப சாலை ஆகிய இடங்களில் தார்சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்.
முறைகேடு புகார்
பின்னர் தூய்மை பணியாளர்கள், காவலர்களுக்கு புனித மரியன்னை தொடக்கப்பள்ளியில் நடந்த இலவச மருத்துவ முகாமையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். அதையடுத்து நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தபோது கூறியதாவது:-
திண்டுக்கல் மாநகராட்சிக்கு சாலை பணிக்காக ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.3 கோடியே 52 லட்சத்தில் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பழனி ஒன்றியத்தில் பொறியாளராக பணியாற்றுபவர் மீது ஒப்பந்த பணிகளை வழங்குவதில் முறைகேடு செய்ததாக புகார் வந்துள்ளது. அதுகுறித்து உரிய விசாரணை நடத்தி பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.