மயானத்துக்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்


மயானத்துக்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்
x

மயானத்துக்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் வேப்பம்பட்டு கிராம மக்கள் மனு அளித்தனர்.

வேலூர்

மயானத்துக்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் வேப்பம்பட்டு கிராம மக்கள் மனு அளித்தனர்.

குறைதீர்வு நாள் கூட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.

இதில், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்டவை தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

மயானத்துக்கு பாதை வசதி

கூட்டத்தில், கணியம்பாடியை அடுத்த ஆற்காட்டான்குடிசை கிராமமக்கள் மனு அளித்தனர். அதில், எங்கள் கிராமத்தில் 2 ஆயிரம் மக்கள் வசித்து வருகிறார்கள். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் பொதுமக்ளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நீர்த்்தேக்க தொட்டி பழுதடைந்து உள்ளது. அதற்கு பதிலாக ரூ.60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட உள்ளது. இந்த நீர்தேக்க தொட்டி ஏற்கனவே இருந்த நீர்த்தேக்க தொட்டியின் அருகே கட்டுவதற்காக கிராம மக்கள் சார்பில் இடம் வழங்கப்பட்டுள்ளது. புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டினால் பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட முடியாது என்று சிலர் மனு அளித்துள்ளனர். ஏற்கனவே பள்ளி கட்டிடத்துக்கு தேவையான இடம் தனியாரிடம் வாங்கி கொடுக்கப்பட்டு அங்கு அரசு பள்ளி இயங்கி வருகிறது. எனவே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டினால் பள்ளி மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. எனவே புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை விரைந்து கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கணியம்பாடி ஒன்றியம் வேப்பம்பட்டு கிராம மக்கள் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கிராமத்தில் யாராவது இறந்தால் அவர்களின் உடலை மயானத்துக்கு கொண்டு செல்வதற்கு உரிய பாதை வசதி இல்லை. அதனால் ஒவ்வொரு முறையும் மயானத்துக்கு உடலை கொண்டு செல்ல மிகவும் சிரமப்பட வேண்டி உள்ளது. தற்போது மயானத்துக்கு சிலரின் நிலத்தின் வழியாக செல்லும் நிலை உள்ளது. எனவே மயானத்துக்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

வீட்டை விட்டு விரட்டிய மகன்கள்

பேரணாம்பட்டு பா.ம.க. நகர செயலாளர் முகமத்பாஷா மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதியில் போலி டாக்டர்கள் கிளினிக் நடத்தி வருகிறார்கள். பொதுமக்கள் உயிருடன் விளையாடும் போலி டாக்டர்கள் மீதும், அரசின் அனுமதி இன்றி இயங்கும் மருந்து நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

வேலூர் சமத்நகரை சேர்ந்த முனியம்மாள் கணவர் குள்ளன் என்பவருடன் மனு அளித்தார். அதில், எங்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள். எனது கணவர் பெயரில் உள்ள வீட்டை மகன்கள் பறித்து விட்டு எங்களை விரட்டி விட்டனர். அதனால் நாங்கள் மகள் வீட்டில் வசித்து வருகிறோம். தற்போது மகள் இறந்து விட்டார். அதனால் பேத்தியுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். வாடகை கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். தற்போது மகன்கள் வீட்டை அவர்கள் பெயரில் எழுதி தரும்படி மிரட்டல் விடுக்கிறார்கள். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் வீட்டில் வசிக்கும் மகன்களை வெளியேற்றி விட்டு அதனை எங்களுக்கு மீட்டுத்தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

கூட்டத்தில் வேலூர், காட்பாடி பகுதியை சேர்ந்த 14 பேருக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.


Next Story