பழங்குடியின கிராமத்திற்கு ரூ.3 கோடியில் சாலை வசதி
கோத்தகிரி அருகே பழங்குடியின கிராமத்திற்கு செல்ல ரூ.3 கோடியில் சாலை வசதி செய்து தரப்பட்டு உள்ளது. இதனால் பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே பழங்குடியின கிராமத்திற்கு செல்ல ரூ.3 கோடியில் சாலை வசதி செய்து தரப்பட்டு உள்ளது. இதனால் பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
அடிப்படை வசதிகள்
நீலகிரி மாவட்டத்தில் இருளர், குரும்பர், தோடர், காட்டு நாயக்கர், பனியர், கோத்தர் ஆகிய 6 வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களது வாழ்வியல் நிலையில் சாலை, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் கடந்த காலங்களில் பழங்குடியின மக்கள் கடும் சிரமம் அடைந்தனர். தற்போது பழங்குடியினர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் செய்து தர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தநிலையில் கோத்தகிரி அருகே தாளமொக்கை பழங்குடியின கிராமம் உள்ளது. கோத்தகிரியில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட இருளர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு தமிழ்நாடு அரசின் தொகுப்பு வீடுகள், நடைபாதை, குடிநீர் வசதி செய்து தரப்பட்டு உள்ளது.
கான்கிரீட் சாலை
ஆனால், அந்த கிராமத்தில் சாலை வசதி இல்லை. இதனால் பழங்குடியினர்கள் அவசர தேவை, சிகிச்சை போன்றவற்றுக்கு சென்று வர மிகவும் சிரமப்பட்டனர். இதையடுத்து தங்களது கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பல ஆண்டுகளாக அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் கிராம மக்கள் தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு தனி பிரிவுக்கு மனு அனுப்பினர்.
இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் பழங்குடியின கிராமத்தில் சாலை அமைக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் செம்மனாரை கிராமத்தில் இருந்து தாளமொக்கை வரை 3 கி.மீ. தூரத்திற்கு கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை நேற்று முன்தினம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. முதல் முறையாக தங்கள் கிராமத்திற்கு சாலை வசதி செய்து தரப்பட்டு உள்ளது. இதனால் பழங்குடியின மக்கள் தங்களின் பாரம்பரிய இசைக்கேற்ப நடனமாடி மகிழ்ந்தனர்.
மேலும் தங்களது கோரிக்கையை ஏற்று சாலை வசதி ஏற்படுத்தி கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.