ரூ.50 லட்சத்தில் சாலை சீரமைப்பு
ரூ.50 லட்சத்தில் சாலை சீரமைப்பு பணி முடிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கூடலூர்,
கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டு கொட்ட மேடு, தர்ப்பக்கொல்லி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். கொட்டமேட்டில் இருந்து தர்ப்பக்கொல்லி செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இதனால் அனைத்து தரப்பினரும் அவதியடைந்து வந்தனர்.
மேலும் மழைக்காலத்தில் சேறும் சகதியுமாக மாறியதால், மாணவ-மாணவிகள் நடந்து செல்ல முடியாத நிலை இருந்தது. இதனால் சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். தொடர்ந்து தேவர்சோலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
இதனிடையே மழை நீர் தேங்காமல் இருக்க இன்டர்லாக் கற்கள் பதிக்கும் பணியும் நடைபெற்றது. தற்போது பணி முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. பேரூராட்சி தலைவர் வள்ளி திறந்து வைத்தார். துணைத் தலைவர் யூனைஷ் பாபு, கூடலூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் லியாகத் அலி உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக வார்டு உறுப்பினர் மாதேவ் வரவேற்றார்.
தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு புதிதாக சாலை அமைத்து உள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளனர்.