குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்


குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
x
திருப்பூர்

குடிமங்கலம்:

குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட மூங்கில் தொழுவில் குடிதண்ணீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிதண்ணீர் தட்டுப்பாடு

குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்கள் திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகிறது. இத்திட்டத்திற்காக பொட்டையம்பாளையம், இலுப்ப நகரம், குடிமங்கலம், புக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நீருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு குடிதண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட மூங்கில் தொழுவு ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் கடந்த சில தினங்களாக குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் குடிதண்ணீருக்காக பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று குடிதண்ணீர் கேட்டு மூங்கில் தொழுவு பிரிவில் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த குடிமங்கலம் போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சாதிக்பாட்சா ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையின் முடிவில் திருமூர்த்தி கூட்டுகுடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாகவே குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது என்றும் கூறினர்.

இலுப்ப நகரம் பகுதியில் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்து விரைவாக குடிதண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மூங்கில் தொழுவு பிரிவில் சாலை மறியல் போராட்டம் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story