விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியல்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியல்
x
திருப்பூர்


திருப்பூர் ஊத்துக்குளி ரோடு முதல் ரெயில்வே கேட் அருகே அம்பேத்கர் நகர் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும், வெளிநபர் ஒருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு அடிதடி நடந்துள்ளது. பின்னர் நேற்று காலை வெளிநபருக்கு ஆதரவாக சிலர் வந்து, அம்பேத்கர் நகரை சேர்ந்த பெண்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று மதியம் 2 மணி அளவில் முதல் ரெயில்வே கேட் அருகே ஊத்துக்குளி ரோட்டில் அமர்ந்து திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். பெண்களை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினார்கள். சம்பவம் பற்றி அறிந்ததும் போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் மற்றும் வடக்கு போலீசார் சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த அடிதடி சம்பவம் தொடர்பாக வடக்கு போலீசார் இருதரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story