பொதுமக்கள் சாலை மறியல்
ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளி ஊராட்சி பகுதியில் குடிநீர் முறையாக வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் ெபாதுமக்கள் சாைல மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
செங்கப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டு பகுதியான பாச்சாங்காட்டுபாளையம் லட்சுமி நகர், ராதா நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்களின் குடிநீர் சேவையை பூர்த்தி செய்ய ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தினமும் 10 ஆயிரம் லிட்டர் வீதம் குடிநீர் வினியோகம் செய்யப்பட வேண்டிய நிலையில் சரிவர வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முறையிட்டும் குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படாத காரணத்தினால் நேற்று இப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் கிடைக்க பெற்ற ஊத்துக்குளி போலீசார் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், வருவாய்த் துறையினர், ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி பணியாளர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது இப்பகுதிக்கு விரைவில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.இதனால் இங்கு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.