விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
x
திருப்பூர்


தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நிதி நிறுவனம் முற்றுகை

திருப்பூர் குமார் நகர் அருகே பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நேற்று இந்த நிறுவனத்தை முற்றுகையிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தமிழ்வேந்தன் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற தொகுதி செயலாளர் சண்முகம், சட்டமன்ற தொகுதி செயலாளர் ஏ.பி.ஆர்.மூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் சத்தியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தினர் கடன் வாங்கியவர்களை ஆட்களை வைத்து மிரட்டுவதாகவும், வாடிக்கையாளர்களுக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தும் வகையில் பேசுவதாகவும், பணம் கட்டி முடித்த பின்னரும் என்.ஓ.சி. சான்றிதழ் தர மறுப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தின் போது குற்றம் சாட்டப்பட்டது. எனவே நிதி நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

சாலை மறியல்

பின்னர் திடீரென அவினாசி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் எனவும் மறியலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதில் மக்கள் ஜனநாயக முன்னேற்ற கட்சியினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story