நவலை கிராமத்தில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பதை தடுக்கக்கோரி மாணவ-மாணவிகள் சாலை மறியல்-3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


தினத்தந்தி 11 Oct 2022 12:15 AM IST (Updated: 11 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

மொரப்பூர்:

நவலை கிராமத்தில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனையை தடுக்கக்கோரி மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மதுபாட்டில்கள் விற்பனை

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ளது நவலை கிராமம். இந்த கிராமத்தில் சிலர் அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக மதுபாட்டில்களை 24 மணி நேரமும் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. மேலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் போது, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து அவை விற்பனை செய்யப்படுகின்றன.

இதனால் இளைஞர்கள் அதிகளவில் மது பழக்கத்துக்கு அடிமையாகி வருவதாக நவலை கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்வது குறித்து பலமுறை புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

சாலை மறியல்

இந்தநிலையில் நேற்று காலை 7 மணிக்கு நவலை பஸ் நிறுத்தத்தில் மாணவ-மாணவிகள் மற்றும் கிராம மக்கள் திரண்டனர். அவர்கள் கள்ளத்தனமாக மதுபாட்டில்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மொரப்பூர்-கம்பைநல்லூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் பஸ்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த அரூர் உதவி கலெக்டர் விஸ்வநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ராஜா சோமசுந்தரம், தாசில்தார் கனிமொழி, கம்பைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

நடவடிக்கை

அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், தங்கள் கிராமத்தில் கள்ளத்தனமாக 24 மணி நேரமும் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதால், பலரும் மது பழக்கத்துக்கு அடிமையாகி வருகிறார்கள். இதனால் குடும்பங்களில் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் நடந்து வருகின்றன.

மதுபாட்டில்கள் விற்பனை குறித்து பலமுறை புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். அதுவரை சாலை மறியலை கைவிட மாட்டோம் என்றனர். மேலும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போக்குவரத்து சீரமைப்பு

இதையடுத்து அதிகாரிகள், மறியலில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள், பொதுமக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், நவலை கிராமத்தில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

இதில் சமாதானம் அடைந்த மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் மொரப்பூர்-கம்பைநல்லூர் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். மறியல் கைவிடப்பட்ட பிறகு போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.


Next Story