வேப்பனப்பள்ளி அருகே மார்கண்டேயன் நதியில் பாலம் கட்டக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே மார்கண்டேயன் நதியில் மேம்பாலம் கட்டக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மார்கண்டேயன் நதி
வேப்பனப்பள்ளி அருகே உள்ள நெடுசாலை கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் இருந்து மார்கண்டேயன் நதியின் மறுபுறம் ஜே.ஜே.நகர், கண்ணப்பன் கொட்டாய், முத்துராமன் கொட்டாய், ஒட்டுக்கொட்டாய் உள்பட 6 கிராமங்கள் உள்ளன. இவர்கள் பல்வேறு தேவைகளுக்காக நெடுசாலை கிராமத்திற்கு மார்கண்டேய நதியை கடந்து, வந்து செல்கிறார்கள்.
இந்தநிலையில் கடந்த 2 ஆண்களாக தொடர் மழை காரணமாக மார்கண்டேய நதியில் தண்ணீர் செல்கிறது. கனமழை பெய்யும் போது வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்களால் நதியை கடக்க முடியவில்லை. சிலர் ஆபத்தான முறையில் நதியை கடக்கும் அவலமும் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.
சாலை மறியல்
இதனிடையே நதியை கடக்க வசதியாக நெடுசாலை மற்றும் சுற்றுப்பகுதி பொதுமக்கள் மேம்பாலம் அமைத்து தரக்கோரி கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், கலெக்டர் உள்பட பல்வேறு அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆனால் மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் மார்கண்டேயன் நதியின் குறுக்கே மேம்பாலம் கட்டக்கோரி நெடுசாலை கிராமத்தில் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் அருகில் உள்ள பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
பொதுமக்களின் போராட்டம் குறித்து தகவல் அறிந்த குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் நெடுசாலை கிராமத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், மேம்பாலம் இல்லாததால் நதியை கடக்க மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். தற்போது இந்த பகுதியில் ஏக்கர் கணக்கில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.
இவற்றை அறுவடை செய்ய எந்திரங்களை ஆற்றை கடந்து கொண்டு வர முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் நெல் பயிர் வீணாகி பல லட்சம் நஷ்டம் ஏற்படும் என்றனர். இதையடுத்து வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சபரிநாதன், சீனிவாசமூர்த்தி மற்றும் மாவட்ட பொதுப்பணித்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மார்கண்டேயன் நதியின் குறுக்கே மேம்பாலம் கட்டப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.