சுடுகாடு வசதி இல்லாததால் மூதாட்டி பிணத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்-ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


சுடுகாடு வசதி இல்லாததால் மூதாட்டி பிணத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்-ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 12 Nov 2022 12:15 AM IST (Updated: 12 Nov 2022 12:18 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி:

வேப்பனப்பள்ளி அருகே சுடுகாடு வசதி இல்லாததால் மூதாட்டி பிணத்துடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இருளர் இன மூதாட்டி சாவு

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள சின்ன பூதிமுட்லு பகுதியில் இருளர் இனத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு சுடுகாடு வசதி இல்லை. இதனால் அவர்கள் இறந்தவர்களின் உடல்களை வனப்பகுதியில் அடக்கம் செய்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று இருளர் இனத்தை சேர்ந்த வெங்கடம்மா என்ற மூதாட்டி உடல் நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து அவருக்கு உறவினர்கள் இறுதி சடங்கு செய்தனர். பின்னர் மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.

சாலை மறியல்

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மூதாட்டியின் உடலை அடக்கம் செய்யக்கூடாது என்று கூறினர். இதனால் இருளர் இன மக்களுக்கும், வனத்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த இருளர் இன மக்கள் மூதாட்டி பிணத்துடன் கிருஷ்ணகிரி-பேரிகை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது மழை கொட்டியதால், தார்பாயை பிடித்து கொண்டு மறியல் செய்தனர். மேலும் சுடுகாடு வசதி கேட்டு கோஷங்களை எழுப்பினர். மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்துபாதிக்கப்பட்டது.

உடல் அடக்கம்

இதுகுறித்து தகவல் அறிந்த வேப்பனப்பள்ளி போலீசார், வருவாய்த்துறையினர் மற்றும் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் வனத்துறையினர் வனப்பகுதியில் உடலை அடக்கம் செய்ய அனுமதி இல்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து வருவாய்த்துறையினர் புறம்போக்கு நிலத்தில் வெங்கடம்மாவின் உடலை அடக்கம் செய்ய அனுமதி அளித்தனர்.

இதனை ஏற்று இருளர் இன மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் மூதாட்டி வெங்கடம்மா உடல் புறம்போக்கு நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இருளர் இன மக்களின் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story