ஆர்.எஸ்.தொட்டம்பட்டியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
மொரப்பூர்:
ஆர்.எஸ்.தொட்டம்பட்டியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் தட்டுப்பாடு
மொரப்பூர் ஒன்றியம் சாமாண்டஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஆர்.எஸ்.தொட்டம்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் கடந்த ஓராண்டாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே கடந்த சில மாதங்களாக குடிநீர் வினியோகம் திடீரென நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பிற பகுதிகளுக்கு சென்று தண்ணீர் பிடித்து வந்தனர். மேலும் அருகில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் சேகரித்து பயன்படுத்தி வந்தனர். இதனால் அந்த பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
சாலை மறியல்
இந்தநிலையில் குடிநீர் வினியோகிக்கப்படாததால் ஆத்திரமடைந்த ஆர்.எஸ்.தொட்டம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் கல்லாவி-மொரப்பூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் குடிநீரை முறையாக வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
சாலை மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.