சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர்
உடுமலையில் பெய்த மழையால் சாலை பகுதிகள் மற்றும் விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
உடுமலையில் மழை
உடுமலையில் கடந்த 11 மற்றும் 12-ந்தேதிகளில் பலத்தமழை பெய்தது. நேற்று காலை 7 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 38.2 மி.மீ.மழை பெய்திருந்ததாக பதிவாகியிருந்தது. உடுமலையில் பெய்த பலத்த மழையினால் பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில், தீயணைப்பு நிலையம் அருகில் மழைத்தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. மழை பெய்தால் அந்த இடத்தில் எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அதனால் அந்த இடத்தில் பள்ளமாக உள்ள பகுதியை சாலை உயரத்திற்கு உயர்த்தி சமன்படுத்த வேண்டும் என்று வாகன ஓடடிகள் எதிர்பார்க்கின்றனர். இதேபோன்று சாலைகள் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளமான இடங்களில் மழைத்தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதையும் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் எதிர்பார்க்கின்றனர்.
கொக்குகள் கூட்டசாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர்ம்
உடுமலை சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் மழைத்தண்ணீர் தேங்கி நிற்கிறது.உடுமலை நகராட்சி பகுதியில், பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள தென்னை தோப்பில் மழைத்தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. அதனால் இங்கு கொக்குகள் கூட்டம் அதிகமாக உள்ளது. கிராமப்புறங்களில் உள்ள குளம், குட்டைகள், விளைநிலங்கள் பகுதிகளில் கொக்குகள் கூட்டமாக இரை தேடும். நகர பகுதியில் சில நேரங்களில் பறந்து செல்லுமே தவிர கூட்டமாக உட்கார்ந்து இருப்பதும், இரை தேடுவதும் அரிதாகும்.
இந்த நிலையில் நகராட்சி பகுதியில், பொள்ளாச்சி சாலையில் உள்ள தென்னந்தோப்பில் தேங்கியுள்ள மழைத்தண்ணீர் பகுதியில் நேற்று 100-க்கும் மேற்பட்ட கொக்குகள் ஒன்றாக உட்கார்ந்து இரை தேடின. அவை அடிக்கடி அங்கிருந்து பறந்து அந்த பகுதியில் வட்டமடிப்பதும்,தென்னை மரங்களில் உட்காருவதுமாக இருந்தது. அப்போது இந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து ரசித்து சென்றனர்.
உடுமலையில் நேற்று பகலில் சிறிது நேரம் வெயில் அடித்தது. மாலை 4 மணிக்கு பிறகு சிறிது நேரம் மழை தூறியது.