ஏற்காடு மலைப்பாதையில் சாலை சீரமைக்கும் பணி தொடங்கியது


ஏற்காடு மலைப்பாதையில் சாலை சீரமைக்கும் பணி தொடங்கியது
x
சேலம்

ஏற்காடு மலைப்பாதையில் பழுதடைந்த சாலையை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்காட்டிற்கு கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு

சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு பல்வேறு ஊர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த ஆண்டு பெய்த மழையால் சேலத்தில் இருந்து கோரிமேடு வழியாக ஏற்காடு செல்லும் வழியில் உள்ள 2-வது வளைவு மற்றும் 3-வது வளைவு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. அதன்பிறகு அந்த பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து வாகனங்கள் சென்று வர அனுமதி அளிக்கப்பட்டது.

அதேசமயம், மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீண்டும் சரிவு ஏதும் ஏற்பட்டு விடாமல் இருக்க மணல் மூட்டைகள் வைத்து சிமெண்டு கலவை பூசுவதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

சாலை சீரமைக்கும் பணி

அதன்படி, நேற்று காலையில் ஏற்காடு மலைப்பாதையில் பழுதடைந்த சாலையை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இதனால் வருகிற 28-ந் தேதி வரை சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மொபட் மற்றும் மோட்டார் சைக்கிள் மட்டுமே மலைப்பாதையில் சென்று வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்காடு அடிவாரம் பகுதியில் போக்குவரத்து போலீசார் நின்றுக்கொண்டு சுற்றுலா பயணிகள் வந்த கார்களை குப்பனூர் வழியாக மாற்றுப்பாதையில் செல்லுமாறு திருப்பி அனுப்பி வைத்தனர். சேலத்தில் இருந்து அயோத்தியாப்பட்டணம் சென்று அங்குள்ள குப்பனூர் வழியே ஏற்காட்டுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் நேற்று காலை முதல் குப்பனூர் வழியே அரசு, தனியார் பஸ்கள், கார்கள் சென்று வருகின்றன.

28-ந் தேதி வரை

குப்பனூர் பகுதியில் சுங்கச்சாவடி உள்ளது. வருகிற 28-ந் தேதி வரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. அடுத்த மாதம் கோடை விழா நடப்பதை முன்னிட்டு ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள். இதனால் ஏற்காடு மலைப்பாதை முழுவதும் சீரமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story