சாலை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்


சாலை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
x

சாலை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

நாகப்பட்டினம்

இடையாத்தங்குடியில் சாலை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இடையாத்தங்குடி ஊராட்சி

திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடி ஊராட்சி இடையாத்தங்குடியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இடையாத்தங்குடி, கீழசேத்தி, கீழத்தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தினமும் கணபதிபுரம் சென்று அங்கிருந்து பஸ் ஏறி நாகப்பட்டினம், நாகூர், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், பூந்தோட்டம், திருமருகல், திருநள்ளாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர குளச்சி கரை சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில், அம்பகரத்தூர் காளியம்மன் கோவில், பூந்தோட்டம் சரஸ்வதி கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று வரும் பக்தர்களும் இந்த சாலையை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

கீழே விழுந்து வாகன ஓட்டிகள் காயம்

சேதமடைந்த இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பொக்லின் எந்திரம் மூலம் சாலைகள் பெயர்ந்து எடுக்கப்பட்டு சமன் செய்யப்பட்டது. பின்னர் எந்தவித பணிகளும் நடைபெறாமல் அப்படியே உள்ளது. இதனால் ஜல்லி கற்கள் பெயர்ந்து இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். இதனால் சாலை வழியே செல்லும் பொதுமக்கள் எந்த நேரத்திலும் விபத்துக்குள்ளாகி உயிரிழப்புகள் ஏற்படுேமா? என்ற அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

சீரமைக்க வேண்டும்

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு விபத்துக்களை ஏற்படுத்தும் ஆபத்தான சாலையை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story