சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பொன்மொழி எழுதும் போட்டி; கலெக்டர் ஷஜீவனா தகவல்


சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பொன்மொழி எழுதும் போட்டி; கலெக்டர் ஷஜீவனா தகவல்
x
தினத்தந்தி 27 Sept 2023 2:30 AM IST (Updated: 27 Sept 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்ட அளவில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பொன்மொழி எழுதும் போட்டிகள் நடக்க உள்ளதாக கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

தேனி

தேனி மாவட்ட அளவில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பொன்மொழி எழுதும் போட்டிகள் நடக்க உள்ளதாக கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

சாலை விபத்துகள்

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்தியாவில் ஒரு நாளைக்கு சராசரியாக 1,130 சாலை விபத்துகள் நடக்கின்றன. அதில் சுமார் 422 நபர்கள் உயிரிழக்கிறார்கள். சாலை விபத்து உயிரிழப்புகள் அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், செல்போனில் பேசியபடி ஓட்டுதல், மது அருந்தி ஓட்டுதல், ெஹல்மெட் இல்லாமல் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் ஓட்டுதல், சாலை விதிகளை மதிக்காமல் ஓட்டுதல் போன்ற பல்வேறு காரணங்களினால் ஏற்படுகிறது.

தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் போலீஸ் துறையின் பரிந்துரையின்படி 4,328 நபர்களின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதில் அதிக வேகமாக ஓட்டியவர்கள் 211 பேரும், அதிக பாரம் ஏற்றி ஓட்டியவர்கள் 151 பேரும், செல்போன் பேசி ஓட்டியவர்கள் 287 பேரும், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி ஓட்டியவர்கள் 185 பேரும், மது அருந்தி ஓட்டியவர்கள் 58 பேரும், சிவப்பு விளக்கை மதிக்காமல் ஓட்டியவர்கள் 3,228 பேரும் மற்றும் விபத்தினால் மரணத்தை ஏற்படுத்தியவர்கள் 208 பேரும் அடங்குவர்.

விழிப்புணர்வு போட்டி

எனவே, தேனி மாவட்ட மக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, அதிக வேகமாக வாகன ஓட்டுதலை தடை செய்வது குறித்து 'விழிப்புணர்வு பொன்மொழி' எழுதும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் என்று யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம்.

2 வரிகளில் மிகவும் சுருக்கமாகவும், கருத்து மிகுந்ததாகவும் உள்ள பொன்மொழிகள் அனைத்தும் தேர்வு செய்யப்பட்டு. அப்பொன்மொழிகளை எழுதியவர்களுக்கு மாவட்ட கலெக்டரால் பரிசு வழங்கப்படும். போட்டியில் பங்கு பெறுவோர் அவர்களுடைய முழு முகவரி மற்றும் செல்போன் எண்ணுடன் எழுதி அனுப்ப வேண்டும்.

ஒருவர் எத்தனை பொன்மொழிகள் வேண்டுமானாலும் எழுதி அனுப்பலாம். சிறந்த பொன்மொழிகளை தேர்ந்தெடுப்பதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆகியோரின் முடிவே இறுதியானது ஆகும். இப்போட்டியில் கலந்து கொள்ள கடைசி நாள் வருகிற அக்டோபர் 31-ந்தேதி ஆகும். விழிப்புணர்வு பொன்மொழியினை தபால் அட்டை அல்லது தபால் கவரில் எழுதி 'வட்டாரப் போக்குவரத்து அலுவலர், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், தேனி - 625 531' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story