சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கைது


சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கைது
x

விவசாய தொழிலாளர்கள் கைதை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

மயிலாடுதுறை

குத்தாலம்

விவசாய தொழிலாளர்கள் கைதை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

நேரடி நெல் விதைப்பு

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே பருத்தி குடியில் நேரடி நெல் விதைப்பு முறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி விவசாய கூலி தொழிலாளர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.இதை கண்டித்து ஸ்ரீகண்டபுரம் கடைவீதியில் காரைக்கால் - கும்பகோணம் சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பருத்திகுடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் வைரவன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து ஸ்ரீகண்டபுரம் மாரியம்மன் கோவில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

கொள்ளிடம்

கொள்ளிடம் கடைவீதியில் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் கேசவன் தலைமையில் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட15 பேரை கைது செய்தனர். சாலை மறியல் காரணமாக சிதம்பரம்- சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சீர்காழி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டதை கண்டித்து வைத்தீஸ்வரன் கோவில் பஸ் நிலையம் எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் அசோகன் தலைமையில் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் 11 பேரை போலீசார் கைது செய்து பின்னர் விடுதலை செய்தனர்.

திருக்கடையூர்

இதைப்போல திருக்கடையூர், ஆக்கூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருக்கடையூரில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இதுகுறித்து தகவலறிந்த பொறையாறு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட 31 பேரை கைது செய்தனர்.இதைப்போல ஆக்கூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.


Next Story