அடிபம்புடன் சேர்த்து சாலை அமைப்பு
அரக்கோணத்தில் அடிபம்புடன் சேர்த்து சாலை அமைக்கப்பட்டது.
அரக்கோணம் நகராட்சி 18-வது வார்டில் உள்ள சுவால்பேட்டை தாசில்தார் குறுக்கு தெருவில் நகராட்சி சார்பில் நேற்று பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது நகராட்சி ஒப்பந்ததாரர் அந்த தெருவில் இருந்த குடிநீர் அடி பம்ப்பை சேர்த்து பேவர் பிளாக் சாலை அமைத்ததை கண்ட பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் இதுகுறித்து நகராட்சி பொறியாளர் ஆசிர்வாதமிடம் புகார் அளித்தனர். இதனை உடனடியாக சரி செய்து தருவதாக கூறி நகராட்சி ஊழியர்களை அனுப்பி வைத்து அந்த தெருவில் இருந்த அடி பம்ப்பை நகராட்சி ஊழியர்கள் சரி செய்தனர். ஏற்கெனவே வேலூரில் சாலையில் இருந்த அடி பம்பு, மோட்டார்சைக்கிள், கார் உள்ளிட்டவற்றை அகற்றாமல் அப்படியே சாலை போடப்பட்ட நிலையில், அரக்கோணத்திலும் இது போன்ற சம்பவம் நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்று அலட்சியமாக செயல்படும் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.