ஆமை வேகத்தில் நடைபெறும் சாலை விரிவாக்க பணி


ஆமை வேகத்தில் நடைபெறும் சாலை விரிவாக்க பணி
x

நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் ஆமை வேகத்தில் நடைபெறும் சாலை விரிவாக்கப் பணியால் பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் ஆமை வேகத்தில் நடைபெறும் சாலை விரிவாக்கப் பணியால் பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

மக்களின் கேள்வி

கடந்த சில ஆண்டுகளாக நாகர்கோவில் நகரப் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள், குடிநீர் திட்டப் பணிகள் ஆகியவற்றின் காரணமாக குண்டும், குழியுமான சாலைகளால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். நகரின் முக்கிய சாலைகளும் மண்சாலைகளாக தற்போது காட்சி தருகின்றன. அந்த அளவுக்கு சாலைகள் அனைத்தும் மிகவும் மோசமான நிலையிலும், போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையிலும் மாறியிருக்கிறது. இதற்கு உதாரணமாக நாகர்கோவில் சவேரியார் ஆலய சந்திப்பு முதல் செட்டிகுளம் சந்திப்பு வரையிலான சாலையைக் கூறலாம்.

இந்தப்பணிகள் எப்போது முடியும்? என்பது அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது. மோசமான சாலைகளால் நடைபெறும் விபத்துக்களும் அதிகரித்து வருகின்றன. இதற்கு எப்போது விடிவு காலம் பிறக்கும்? என்பது மக்களின் கேள்வியாக இருந்து வருகிறது.

சாலை மூடல்

இந்தநிலையில் நகரின் முக்கிய சாலைகளில் ஒன்றாக கோர்ட்டு ரோடு இருந்து வருகிறது. இந்த சாலையில்தான் பள்ளிகள், மாவட்ட கோர்ட்டு, வக்கீல் அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள், நகைக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் அமைந்துள்ளன. மேலும், கன்னியாகுமரி மார்க்கத்தில் இருந்து வடசேரி பஸ் நிலையம் செல்லக்கூடிய அரசு பஸ்கள், பிற வாகனங்கள், செட்டிகுளம் பகுதியில் இருந்து பொதுப்பணித்துறை அலுவலக சாலை வழியாக வடசேரி செல்லக்கூடிய வாகனங்களுக்கு இந்த கோர்ட்டு ரோடுதான் பிரதான சாலையாக இருந்து வருகிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் பல கட்டங்களாக நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக முத்தமிழ் தெரு அருகில் கழிவுநீர் வாய்க்கால் செல்வதற்கு ஏற்ற வகையில் சிறு பாலம் அமைக்கும் பணிக்காக கடந்த மாதம் 17-ந் தேதி சாலை மூடப்பட்டது. இந்த பணி 10 நாட்களில் முடிவடையும் என்றும், அதுவரை வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என்றும் போக்குவரத்து போலீசாரால் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.

பொதுமக்கள் பாதிப்பு

ஆனால் பணிகள் தொடங்கி இன்றோடு 19 நாட்கள் ஆனபிறகும் இன்னும் முடிவடையாததால் சாலை மூடப்பட்டு உள்ளது. பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால்தான் காலதாமதம் ஆவதற்கு காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதனால், சாலையில் அமைந்துள்ள கோர்ட்டு, பள்ளிகள், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்குச் செல்பவர்கள் செட்டிகுளத்தில் இருந்து கலெக்டர் அலுவலக சந்திப்பு வழியாகவும், மணிமேடை சந்திப்பில் இருந்து பெண்கள் கிறிஸ்தவக்கல்லூரி சாலையின் குறுக்குச்சாலைகள் வழியாக கோர்ட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கோர்ட்டு ரோட்டில் உள்ள அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகள், கோர்ட்டுக்கு செல்லும் பொதுமக்கள், வக்கீல்கள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். ஒரு கி.மீ. முதல் 1½ கி.மீ. தூரம் வரை சுற்றிச் செல்ல வேண்டியது இருப்பதால் ஆட்டோவில் செல்லக்கூடிய பொதுமக்களுக்கு காலவிரயம் ஏற்படுவதோடு, கட்டணமும் அதிகமாக கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், இந்த சாலையில் உள்ள வணிக நிறுவனங்கள் அனைத்திலும் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

திறந்துவிட வேண்டும்

எனவே ஆமை வேகத்தில் நடைபெறும் சிறுபாலப்பணி மற்றும் சாலை விரிவாக்கப்பணியை விரைவாக மேற்கொண்டு கோர்ட்டு ரோட்டை போக்குவரத்துக்கு திறந்து விட வேண்டும் என நாகர்கோவில் நகர மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் கவனம் செலுத்தி பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்பது மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.


Next Story