புங்கனூர் ஊராட்சியில் ரூ.19¼ லட்சத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணி
ரூ.19¼ லட்சத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புங்கனூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் பள்ளிவாசல் தெரு, நடுத்தெரு, வடக்கு தெரு உள்ளிட்ட தெருக்களில் கற்கள் பெயர்ந்து சிதறி கிடந்தன. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். அந்த பகுதியில் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., ஒன்றியக்குழு உறுப்பினர் சோனியாகாந்தி இளமுருகன் ஆகியோரை நேரில் சந்தித்து ஊராட்சி மன்ற தலைவர் ஜுனைதா பேகம் கமாலுதீன் கோரிக்கை மனு கொடுத்தார். இதையடுத்து சீர்காழி சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம், ஒன்றியக் குழு உறுப்பினர் வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.10 லட்சம், ஊராட்சி நிதியின் கீழ் ரூ.4 லட்சத்து 25 ஆயிரம் என மொத்தம் ரூ.19 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் பள்ளிவாசல் தெரு, நடுத்தெரு, வடக்குத்தெரு, மேலத்தெரு, ரகுமான் தெரு உள்ளிட்ட இடங்களில் புதிதாக தார்ச் சாலைகள் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இந்த பணியினை ஊராட்சி மன்ற தலைவர் ஜுனைதா பேகம் கமாலுதீன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது துணைத்தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.