வேலூர் நகரில் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
மக்கள் அவதியடைவதால் வேலூர் மாநகராட்சியில் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
மாநகராட்சி கூட்டம்
வேலூர் மாநகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் சுஜாதா தலைமை தாங்கினார். துணை மேயர் சுனில்குமார், கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கார்த்திகேயன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள் தங்களது வார்டுகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பேசினர்.
அவர்கள் தெரிவித்த புகார்கள் மற்றும் கோரிக்கைகள் விவரம் வருமாறு:-
அன்பு: எனது வார்டில் குடிநீருக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை மூடவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு இடங்களில் தண்ணீர் பிரச்சினை உள்ளது. ஆழ்துளை கிணறு மோட்டார்கள் பழுதுபார்க்கப்படாமல் உள்ளது. இதை சரிசெய்ய வேண்டும். நாய்த்தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த மேயர் சுஜாதா மாநகராட்சியில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நிதி ஒதுக்கி நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணி நடந்து வருகிறது.
புஷ்பலதா: மாநகராட்சி கூட்டம் மாதந்தோறும் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பன்றித்தொல்லை
கணேஷ்சங்கர்: எனது வார்டில் மின்விளக்குகள் அமைக்கப்படாமல் பணிகள் முடிக்கப்பட்டதாக ஒப்பந்ததாரர் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க சென்றால் எனது பொறுப்பு கிடையாது என்று அவர்கள் தட்டிக்கழிக்கின்றனர். இதுகுறித்து நடவடிக்கை வேண்டும். சாலைகள் தோண்டப்பட்டுள்ளதால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். பன்றித்தொல்லை அதிகமாக உள்ளது. நோய் பரவும் அபாயம் உள்ளது. இதற்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு பதிலளித்த கமிஷனர் அசோக்குமார் பன்றித்தொல்லை, மாடுகள் தொல்லைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
விமலா: எனது வார்டு பகுதியில் இளைஞர்கள் பலர் போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர். போலீசார் நடவடிக்கை எடுத்தாலும் பலர் பயன்படுத்துகின்றனர். எனவே அதை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.
குடிநீர் வேண்டும்
சுமதிமனோகரன்: பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. பொங்கல் பண்டிகை வர உள்ளதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். சாமுவேல்நகர் பகுதியில் குடிநீர் வழங்கப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக பலமுறை மனு அளித்துள்ளேன். நடவடிக்கை எடுக்காதது வேதனையாக உள்ளது. இந்த பிரச்சினைக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
மம்தா: தென்றல்நகர் பகுதியில் உள்ள சுடுகாட்டுக்கு செல்ல பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். கலெக்டர் அலுவலகம் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
இதற்கு பதிலளித்த மேயர் சுஜாதா போக்குவரத்து பாதிப்பு குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சர்வீஸ் சாலையை அகலப்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
துணை மேயர் சுனில்குமார்: 1-வது மண்டலத்தில் 54 தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 47 பேருக்கு தான் சம்பளம் ஒதுக்கப்படுகிறது. அந்த ஊதியத்தை பிரித்து தான் 54 பேருக்கும் சமமாக வழங்க வேண்டி உள்ளது. அனைவருக்கும் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரிநீர் செல்லும் பகுதியில் கால்வாய் அமைக்கப்பட 2 திட்ட மதிப்பீடு கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு மதிப்பீட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மற்றொரு திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு பேசினர்.
பொதுமக்களுக்கு வேண்டுகோள்
மேயர் சுஜாதா கூறுகையில், வேலூர் மாநகராட்சியில் அனைத்து வார்டுக்கும் சமமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சாலைக்காக ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கால்வாய் அமைக்க ரூ.20 கோடி ஒதுக்கப்பட உள்ளது. மாநகராட்சியில் ஆங்காங்கே குப்பை கொட்டப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனினும் பொதுமக்கள் பலர் சாலைகளில் கொட்டுகின்றனர். குப்பை சேகரிக்க கூடுதலாக 120 சைக்கிள் ரிக்ஷா விரைவில் வழங்கப்படும். குப்பை சேகரிக்க வரும் தூய்மை பணியாளர்களிடம் குப்பையை பொதுமக்கள் ஒப்படைக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் பெரும்பாலான கவுன்சிலர்கள் சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.
215 தீர்மானங்கள்
முன்னதாக, பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 மற்றும் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு வழங்க ஆணை பிறப்பித்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தல் உள்ளிட்ட 215 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.