கலெக்டர் அலுவலகம் முற்றுகை-சாலைமறியல்


கலெக்டர் அலுவலகம் முற்றுகை-சாலைமறியல்
x
தினத்தந்தி 18 April 2023 12:15 AM IST (Updated: 18 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வறட்சி நிவாரணம் வழங்ககோரி ராமநாதபுரத்தில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, சாலைமறியலில் ஈடுபட்ட 238 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம்

வறட்சி நிவாரணம் வழங்ககோரி ராமநாதபுரத்தில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, சாலைமறியலில் ஈடுபட்ட 238 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

வறட்சி நிவாரணம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் நெல்விவசாயம் அடியோடு விளையாமல் கருகி போனது. இதன்காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு அரசின் நிவாரணம் வழங்க வேண்டும், பயிர்காப்பீடு முழுமையாக வழங்க வேண்டும் என்று கோரி அரசை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். 3 போகம் விளையும் டெல்டா மாவட்டங்களில் நிவாரணம் உடனடியாக வழங்கப்பட்டுள்ள நிலையில் ஒருபோகமே விளைய வழியில்லாத ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஏன் நிவாரணம் வழங்க தாமதம் என்று கேட்டு தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர்.

கடந்த வாரம் மாவட்ட நிர்வாகத்திடம் உடனடியாக நிவாரணம் வழங்காவிட்டால் மறியல், முற்றுகை போராட்டம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களை நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். ஆனால். இதுவரை அரசின் சார்பில் எந்தவித நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை.

முற்றுகை

இந்நிலையில் நேற்று காலை ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். இவர்களை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் போலீசார் வழிமறித்து முக்கிய நபர்கள் மட்டும் சென்று மனு அளிக்க அனுமதிப்பதாக தெரிவித்தனர். ஆனால், இதனை கேட்காத விவசாயிகள் தங்களின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி கடந்த 4 மாதமாக காத்திருந்தும் எந்த பயனும் இல்லை என்று கூறி தடுப்பு வேலிகளை தள்ளிவிட்டு செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் போலீசாரை மீறி விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்றனர். அங்கு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மாவட்ட வருவாய் அதிகாரி கோவிந்தராஜுலு அங்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், விரைவில் நிவாரணம் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இருப்பினும் அதை ஏற்க மறுத்த விவசாயிகள் போராட்டத்ைத தொடர்ந்தனர்.

சாலைமறியல்

இதையடுத்து விவசாயிகள் கலெக்டர் அலுவலக வெளிப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து அங்கு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை அங்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

உடனடியாக எங்களுக்கு நிவாரணம் குறித்த அறிவிப்பு வெளியிடவேண்டும் இல்லாவிட்டால் சாகும்வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று கூறி மறியலை தொடர்ந்தனர்.

இதனை தொடர்ந்து போலீசார் மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 238 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.


Next Story