குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
சாயல்குடி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சாயல்குடி,
சாயல்குடி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
சாயல்குடி அருகே ஒப்பிலான் ஊராட்சி எம்.ஆர்.பட்டினம் கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பைப்லைன் அமைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் தண்ணீர் வரவில்லை எனவும், தண்ணீர் திறந்து விட்டால் பைப்புகள் உடைந்து தண்ணீர் வெளியே வீணாக சென்று விடுகிறது எனவும், இதனால் தங்கள் பகுதிக்கு பல மாதங்களாக தண்ணீர் கிடைக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மேலும் இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை சாயல்குடியில் இருந்து ஒப்பிலான் வழியாக வாலிநோக்கம் செல்லும் சாலையில் எம்.ஆர்.பட்டினம் பஸ் நிறுத்தம் அருகே தண்ணீர் எடுக்கும் வண்டிகளில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளியில் தேர்வுக்கு சென்ற மாணவ, மாணவிகள் பாதிப்புக்கு உள்ளாகினர். இதுகுறித்து அறிந்த சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா மற்றும் போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கடுகு சந்தை ஊராட்சி சத்திரம் கிராமத்தில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் புதிய பைப்லைன் அமைத்து குடிநீர் வழங்கினால் மட்டுமே குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் எனவும், இல்ைலயொனில் மீண்டும் போராட்டம் நடத்துவோம் எனவும் பொதுமக்கள் கூறினர்.
இதையடுத்து அவர்கள் கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு சென்று வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜாவை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, கடலாடி ஒன்றிய குழு தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் ஆகியோர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.