பொதுமக்கள் சாலை மறியல்
சூளகிரி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சூளகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காமராஜ் நகரில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்தப் பகுதியில் சூளகிரி ஒன்றிய அலுவலகம் மூலம் புதிய கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. ஏற்கனவே உள்ள பழைய கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து அதன் மீது கழிப்பறைகள் மற்றும் வீடுகளுக்குள் செல்ல சாய்வு தளம் படிக்கட்டுகளை பொதுமக்கள் சிலர் அமைத்துள்ளனர். புதிய கால்வாய் அமைக்கும் பணி நடந்துவரும் நிலையில் ஏற்கனவே பழைய கால்வாய் மீது அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிய கால்வாய் பணியை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி சூளகிரி உள்ள இந்தியன் வங்கி முன்பு நேற்று காலை பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன், விமல் ரவிக்குமார் மற்றும் சூளகிரி போலீசார் வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் சூளகிரி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.