பைத்தூர் ஊராட்சியில் வெவ்வேறு இடங்களில்சீரான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ஆத்தூர்
ஆத்தூர் அருகே பைத்தூர் ஊராட்சியில் வெவ்வேறு இடங்களில் சீரான குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடிநீர் பிரச்சினை
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பைத்தூர் ஊராட்சி 3-வது வார்டு அண்ணா நகர் குட்டை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு கடந்த சில நாட்களாக சீரான குடிநீர் வினியோகம் செய்யவில்லை என தெரிகிறது.
மேலும் ஊராட்சிக்கு சொந்தமான மோட்டார் பழுதாகி பல நாட்கள் கடந்தும் சரி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று ஆத்தூர்- பைத்தூர் சாலையில் திரண்டனர். பின்னர் சீரான குடிநீர் வழங்ககோரி காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஆத்தூர் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில், ரூரல் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் பழுதடைந்த மோட்டாரை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதேபோல் பைத்தூர் ஊராட்சி 8 மற்றும் 9-வது வார்டு பகுதிகளில் மலைவாழ் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் வழங்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று பைத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
ஒரே ஊராட்சியில் 2 இடங்களில் சாலை மறியல் காரணமாக அந்த பகுதி வழியாக சென்ற வியாபாரிகள், விவசாயிகள் அவதியடைந்தனர். 2 மறியல் போராட்டம் காரணமாக ஆத்தூர்- பைத்தூர் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.