கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி சாலைமறியல்
சுடுகாட்டுப்பாதையை சேதப்படுத்தியதை தட்டிக்கேட்டவர் வெட்டப்பட்டார். கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் 2 மணி நேரத்துக்கும் மேல் மறியலில் ஈடுபட்டதால் தேர்வு எழுத சென்ற மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
வந்தவாசி
சுடுகாட்டுப்பாதையை சேதப்படுத்தியதை தட்டிக்கேட்டவர் வெட்டப்பட்டார். கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் 2 மணி நேரத்துக்கும் மேல் மறியலில் ஈடுபட்டதால் தேர்வு எழுத சென்ற மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
சுடுகாட்டுப்பாதை
வந்தவாசியை அடுத்த தூக்குவாடி கிராமத்தில் சுடுகாட்டு பாதையை பொதுமக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த சுடுகாட்டு பாதை அருகில் நிலத்தை வாங்கிய ஒருவர் சுடுகாட்டுப் பாதை தன்னுடைய இடத்தில் உள்ளது என்று கூறி அதனை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து பொதுமக்கள் தரப்பில் வந்தவாசி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சுடுகாட்டுப்பாதையை சேதப்படுத்திய நிலத்தை வாங்கியவர்கள் தரப்பினரிடம் பொதுமக்கள் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பொதுமக்கள் தரப்பில் பேசிய சீனிவாசன் என்பவர் வெட்டப்பட்டார். தலையில் காயம் அடைந்த அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மறியல்
இதை கண்டித்தும், சீனிவாசனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் வந்தவாசி-காஞ்சீபுரம் சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த வந்தவாசி போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டுச் சென்றனர்.இந்த சாலை மறியல் போராட்டத்தால் வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
பள்ளி மாணவர்கள், தேர்வு எழுதும் மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.