தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்துஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் மறியல்63 பேர் கைது


தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்துஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் மறியல்63 பேர் கைது
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 24 Jan 2023 6:45 PM GMT)

தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து விழுப்புரம், திண்டிவனத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் 63 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்


மோடி அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளையும், 44 தொழிலாளர் சட்டங்களை 4 சட்ட தொகுப்புகளாக மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரசு மற்றும் தனியார் துறைகளில் 240 நாட்களாக தொடர்ந்து பணிபுரியும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மருத்துவத்துறை, டாஸ்மாக், கூட்டுறவு மற்றும் பொதுத்துறைகளில் எந்த தொழிலில் பணிபுரிந்தாலும் ரூ.21 ஆயிரத்துக்கு குறையாமல் மாத ஊதியம் வழங்க வேண்டும், நலவாரிய பதிவுகளை எளிமைப்படுத்தி தாமதம் இல்லாமல் நிதிப்பலன்களை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் மாநிலம் தழுவிய அளவில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

அந்த வகையில் விழுப்புரத்தில் நேருஜி சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு நடந்த மறியல் போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சவுரிராஜன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் சங்கையா கண்டன உரையாற்றினார். இதில் நிர்வாகிகள் செல்வம், நாராயணன், ராஜேந்திரன், ராமச்சந்திரன், திவ்யபிராங்க்ளின், ஜெகக்கண்ணன், வசந்தராஜ் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

63 பேர் கைது

உடனே விழுப்புரம் மேற்கு போலீசார் விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 38 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதேபோல் திண்டிவனத்தில் மாவட்ட தலைவர் இன்பஒளி தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர். 2 இடங்களிலும் கைதான அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story