சேறும், சகதியுமாக மாறிய சாலைகள்
காட்பாடி பகுதியில் சேறும், சகதியுமாக மாறிய சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
காட்பாடியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சேறும் சகதியுமாக சாலைகள் மாறின. ரெயில்வே மேம்பால பணிக்காக திருப்பி விடப்பட்ட மாற்றுப்பாதையில் வாகன ஓட்டிகள் விழுந்து, எழுந்து செல்கின்றனர்.
மழையால் சேதமடைந்த சாலைகள்
காட்பாடியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் குட்டை போல் தேங்கி உள்ளது. காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் மாற்றுப்பாதையில் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள், பஸ்கள், லாரிகள் சென்று வருகின்றன.
இதில் மதிநகர், அருப்பு மேடு, ஹவுசிங் போர்டு வழியாகத்தான் கிளித்தான்பட்டரை செல்லும் மாற்றுப்பாதை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஹவுசிங் போர்டு சாலை சேறும், சகதியுமாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுவதால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களில் சிலர் நிலைதடுமாறி சேற்றில் வழுக்கி விழுந்து எழுந்து செல்கின்றனர்.
வழுக்கி விழுகின்றனர்
பகலில் இந்த நிலைமை என்றால் இரவில் இந்த சாலையில் விளக்கு வசதி இல்லாததால் பலர் வழுக்கி விழுகின்றனர். இதில் ஒரு சிலருக்கு கைகளிலும், கால்களிலும் காயம் ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இந்த மாற்றுப் பாதையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். குறிப்பாக ஹவுசிங் போர்டு சாலையை விரைந்து சீரமைத்தால் தான் மக்கள் பயன்படுத்த முடியும். இரவில் இந்த பகுதியில் செல்ல தெருவிளக்கு வசதி இல்லை. பெண்களும், பள்ளி மாணவ-மணவிகளும் பாதுகாப்பற்ற முறையில் தான் பயணிக்கின்றனர். எனவே
அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து இந்த மாற்றுபாதைக்காக ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடி நிதியை விரைந்து செயல்படுத்தி சாலையை சீரமைக்க வேண்டும் என்றனர்.
குட்டைபோல் தேங்கிய மழைநீர்
வி.ஜி.ராவ்நகர் ஏ செக்டார் விரிவு பகுதியில் 5-வது தெரு தெருவில் மழைநீர் குட்டை போல் தேங்கி உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மழைநீர் சாலையில் தேங்கி இருப்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் சாலை சேறும், சகதியுமாக உள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் செல்லவே முடியவில்லை. மேலும் பெண்கள் நடந்து செல்லவும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் விரைந்து மழைநீரை அகற்றி சாலையை செப்பனிட வேண்டும் என்றனர்.
அதேபோல கழிஞ்சூர் பி.டபிள்யூ.டி. நகரிலும் மெயின் சாலையில் மழைநீர் குட்டை போல் தேங்கி உள்ளது. பல இடங்களில் சாலை சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இன்னும் தொடர்ந்து மழை பெய்தால் இந்த சாலையில் செல்லவே முடியாது என மக்கள் கூறுகின்றனர். இந்த சாலையை தார் சாலையாக மாற்றித் தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.