சாலையோர வியாபாரிகள் காத்திருப்பு போராட்டம்
பழனி சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில், பழனி முருகன் கோவில் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
பழனி சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில், பழனி முருகன் கோவில் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. இதற்கு சங்க மாவட்ட செயலாளர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் செந்தில்குமார், நகர செயலாளர் கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் பிரபாகரன் கலந்துகொண்டு பேசினார்.
போராட்டத்தின்போது, பழனி கிரிவீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே சாலையோரங்களில் கடை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தகவலறிந்த பழனி போலீசார், கோவில் அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். அதைத்தொடர்ந்து வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். காத்திருப்பு போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.