சாலையோர வியாபாரிகள் மறியல்
வடமதுரை அருகே, கடை அமைப்பதற்கு வேறு இடத்தை ஒதுக்கி தரக்கோரி சாலையோர வியாபாரிகள் மறியலில் ஈடுபட்டனர்.
சாலையோர கடைகள் அகற்றம்
வடமதுரை அருகே உள்ள அய்யலூரில், திண்டுக்கல்-திருச்சி நான்குவழிச்சாலை மேம்பாலத்தின் அடிப்பகுதியிலும், சர்வீஸ் சாலையிலும் 100-க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் கடை வைத்திருந்தனர்.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அந்த கடைகளை அகற்றினர்.இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், கடை வைப்பதற்கு வேறு இடத்தை ஒதுக்கி தருமாறும் பேரூராட்சி நிர்வாகத்திடம் சாலையோர வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அவர்களுக்கு மாற்று இடம் தேர்வு செய்யும் பணியில் பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வந்தனர்.
வியாபாரிகள் மறியல்
இந்தநிலையில் அய்யலூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள புறம்போக்கு நிலத்தில், வியாபாரிகள் தார்ப்பாய்களை விரித்து கடைகள் அமைக்க முயன்றனர். அந்த இடத்தின் அருகே ஆட்டோ நிறுத்தம் ஒன்று உள்ளது. அங்கு கடைகள் அமைத்தால் தங்களுக்கு இடையூறு ஏற்படும் என்று ஆட்டோ டிரைவர்கள் கருதினர். இதனால் ஆட்டோ டிரைவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் அடையாத வியாபாரிகள், திண்டுக்கல்-திருச்சி நான்கு வழிச்சாலையில் திடீரென அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து வியாபாரிகளிடம் இந்த பிரச்சினை தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அந்த சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.