சுற்றித்திரியும் யானையால் பரபரப்பு
ஓசூர்:-
ஓசூர் அருகே சுற்றித்திரியும் யானையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதனை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஒற்றை யானை
தமிழக- ஆந்திரா எல்லையான கிருஷ்ணகிரிமாவட்டம் தீர்த்தம் பகுதியில் இருந்து ஒற்றை யானை, கடந்த சில நாட்களுக்கு முன்பு சூளகிரி வழியாக ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதிக்குள் புகுந்தது.
இந்த யானையை, வனத்துறையினர் நேற்று தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். இந்த நிலையில், சானமாவு மற்றும் பேரண்டப்பள்ளி காட்டுப்பகுதியில் நீண்ட நாட்களாக மற்றொரு யானை, முகாமிட்டு, சுண்டட்டி, காவேரி நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் இரவு நேரங்களில் புகுந்து விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
காட்டுக்குள் விரட்ட தீவிரம்
இந்த யானையையும் அடர்ந்த காட்டுப்பகுதிக்கு விரட்டியடிக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த யானையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வரும் வனத்துறையினர், இன்று மாலைக்குள் அதனை அடர்ந்தகாட்டுப்பகுதிக்கு விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.