திருடிய பணம், நகைகளை தரமறுத்த கொள்ளையன் வெட்டிக்கொலை
திருச்சுழி அருகே திருடிய பணம், நகையை தரமறுத்த கொள்ளையனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சுழி,
திருச்சுழி அருகே திருடிய பணம், நகையை தரமறுத்த கொள்ளையனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நகை, பணம் கொள்ளை
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ஆனைக்குளத்தை சேர்ந்தவர் பகவதி (வயது 47). இவர் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
பகவதி திருடிய பணம் மற்றும் நகைகளை அந்த பகுதியை சேர்ந்த சிலர் அவ்வப்போது மிரட்டி வாங்கி சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் 3 பேர் சேர்ந்து ஆனைக்குளத்தில் இருந்த பகவதியை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றனர்.
வெட்டிக்கொலை
பின்னர் காத்தான்பட்டி பெரியண்ணசாமி கோவில் பின்புறம் வைத்து திருடி வைத்துள்ள பணத்தையும், நகையையும் தருமாறு அவர்கள் 3 பேரும் சேர்ந்து கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது பகவதி பணத்தை தரமறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் 3 பேரும் சேர்ந்து பகவதியை அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பகவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
3 பேருக்கு வலைவீச்சு
இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சுழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பகவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பகவதியின் மனைவி சாரதா அளித்த புகாரின் பேரில் திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்து விட்டு தப்பி சென்ற 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.