போடி அருகே அடுத்தடுத்த 6 கடைகளில் கொள்ளை; நள்ளிரவில் துணிகரம்


போடி அருகே அடுத்தடுத்த 6 கடைகளில் கொள்ளை; நள்ளிரவில் துணிகரம்
x

போடி அருகே அடுத்தடுத்த 6 கடைகளில் பணம், பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். சாலையோரம் நின்றிருந்த மோட்டார் சைக்கிளையும் அவர்கள் திருடினர்.

தேனி

போடி அருகே அடுத்தடுத்த 6 கடைகளில் பணம், பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். சாலையோரம் நின்றிருந்த மோட்டார் சைக்கிளையும் அவர்கள் திருடினர்.

6 கடைகளில் கொள்ளை

தேனி மாவட்டம் போடி அருகே ரெங்கநாதபுரத்தில், போடி-தேவாரம் சாலையில் வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் செல்போன், ஜவுளி, எலக்ட்ரிக்கல் என வரிசையாக அடுத்தடுத்து 6 கடைகள் உள்ளன.

இந்தநிலையில் நேற்று இரவு வழக்கம்போல் வியாபாரிகள், தங்களது கடைகளை பூட்டிவிட்டு வீடுகளுக்கு சென்றுவிட்டனர். இதையடுத்து நள்ளிரவு அங்கு வந்த மர்மநபர்கள், அடுத்தடுத்து இருந்த 6 கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

அப்போது கடைகளில் இருந்த பணம், பொருட்களை கொள்ளையடித்தனர். மேலும் வணிக வளாகத்தின் முன்பு சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மர்மநபர்கள் திருடி சென்றனர்.

போலீசார் விசாரணை

இதற்கிடையே இன்று காலை கடைகளை திறக்க வந்த வியாபாரிகள், கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து போடி தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரித்தனர். மேலும் மோப்பநாய் பைரவ் வரவழைக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. அப்போது அந்த நாய், திருட்டு சம்பவம் நடந்த வணிக வளாகத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதேபோல் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் 6 கடைகளில் இருந்த ரூ.15 ஆயிரம் மற்றும் சில பொருட்கள் கொள்ளைபோனது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து 6 கடைகளில் கொள்ளை நடந்த சம்பவம் ரெங்கநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story