கடலூர் நகைக்கடையில் கவரிங்கை வைத்துவிட்டு தங்க மோதிரம் திருடிய 2 பேர் கைது
கடலூர் நகைக்கடையில் கவரிங்கை வைத்து விட்டு தங்க மோதிரத்தை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெருவை சேர்ந்தவர் சண்முகம் மகன் கிஷோர் (வயது 27). இவர் அதே பகுதியில் உள்ள நகைக்கடையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று இவர் பணியில் இருந்த போது, ஒரு இளம்பெண்ணும், வாலிபரும் நகை வாங்குவது போல் கடைக்குள் வந்தனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்த கடை ஊழியரிடம், மோதிரம் கேட்டனர். அதன்படி அங்கிருந்த ஊழியர், மோதிரம் உள்ள பெட்டியை அவர்கள் முன்பு வைத்தார். இதை வாங்கிய 2 பேரும் ஒவ்வொரு மோதிரமாக எடுத்து மாடல்களை பார்த்து, மோதிரம் வாங்குவது போல் பாவனை செய்தனர்.
மோதிரம் திருட்டு
அப்போது அந்த இளம்பெண் தான் கையில் வைத்திருந்த ஒரு கவரிங் மோதிரத்தை அந்த நகை பெட்டியில் வைத்து மாற்றி, அதற்கு பதிலாக அதில் இருந்த 3 கிராம் தங்க மோதிரத்தை திருடினார். இதை பார்த்த கடை ஊழியர்கள், அவர்களை கையும், களவுமாக பிடித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் ஒப்படைத்தனர்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார், அவர்கள் 2 பேரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்த பெண் சிதம்பரம் கொத்தவாசல் கென்னடிதெருவை சேர்ந்த கதிர்காமன் மனைவி மேனகா (வயது 30) என்றும், அந்த வாலிபர் நாகை மாவட்டம் சீர்காழி கனகசபை மகன் கவுதம் (25) என்று தெரிந்தது.
2 பேர் கைது
தொடர்ந்து அவர்களிடம் விசாரித்த போது, மேனகா, கவுதம் ஆகிய 2 பேரும் தாங்கள் கையில் கவரிங் மோதிரங்களை கொண்டு வந்து, அதை நகைக்கடையில் யாருக்கும் தெரியாமல் வைத்து விட்டு தங்க மோதிரங்களை நூதன முறையில் திருடிச்செல்வதற்காக வந்ததும், அதன்படி முதல் கவரிங் மோதிரத்தை வைத்து தங்க மோதிரத்தை திருடிய போது, கையும், களவுமாக கடை ஊழியர்களிடம் சிக்கியது தெரிந்தது.
இது பற்றி மேலாளர் கிஷோர் அளித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கவரிங் மோதிரங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதேபோல் வேறு ஏதாவது நகைக்கடையில் திருடி உள்ளார்களா? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இருப்பினும் இந்த நூதன திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.