சித்தா டாக்டர் வீட்டில் 14 பவுன் நகை -வெள்ளி பொருட்கள் கொள்ளை


சித்தா டாக்டர் வீட்டில் 14 பவுன் நகை -வெள்ளி பொருட்கள் கொள்ளை
x
தினத்தந்தி 31 March 2023 12:30 AM IST (Updated: 31 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் அருகே சித்தா டாக்டர் வீட்டில் 14 பவுன் நகை, வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் ஸ்கூட்டரையும் விட்டு வைக்கவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

நாகப்பட்டினம்

கீழ்வேளூர் அருகே சித்தா டாக்டர் வீட்டில் 14 பவுன் நகை, வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் ஸ்கூட்டரையும் விட்டு வைக்கவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

சித்தா டாக்டர்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள ராதாமங்கலம் ஊராட்சி எறும்புகன்னி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் அன்பழகன்(வயது 54). சித்தா டாக்டரான இவர், கடந்த 27-ந் தேதி அன்று சென்னையில் உள்ள தனது மகள்களை பார்ப்பதற்காக மனைவியுடன் சென்று விட்டார். இதனால் அவருடைய வீடு பூட்டிக்கிடந்தது.

நேற்று முன்தினம் காலை அவருடைய அண்ணன் கருணாநிதி, அன்பழகனின் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்புறம் உள்ள வாசல் கதவு திறந்து கிடந்தது. இதுகுறித்து கருணாநிதி, அன்பழகனுக்கு தகவல் தெரிவித்தார்.

14 பவுன் நகைகள்-வெள்ளி பொருட்கள் கொள்ளை

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அன்பழகன் சென்னையில் இருந்து திரும்பி வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டரையும் காணவில்லை. மேலும் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டிருந்தது.

வீட்டில் அறைகளில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த 14 பவுன் நகைகள், ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தையும் காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்த மர்ம நபர்கள் வீடு புகுந்து நகைகள், வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துக்கொண்டு வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஸ்கூட்டரையும் விட்டுவைக்காமல் அதையும் திருடிச்சென்றது தெரிய வந்தது.

வலைவீச்சு

இதுகுறித்து தகவல் அறிந்த நாகை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயசீலன், அக்பர் அலி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுதொடர்பாக அன்பழகன், கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பழகன் வீட்டில் நகை, வெள்ளி பொருட்கள், பணம் மற்றும் ஸ்கூட்டரை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story